Friday, May 31, 2019

சுதந்திர இந்தியாவில் தலித் முன்னேற்றம்

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. செல்வாக்குடன் சமூகத்தில் முன்னகர்ந்து வரும் ஒரு மேல் சாதி.  அந்த சாதியின் முகமாக ஒரு சாதித் தலைவன். அவனால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சாதிக்கட்சி. அமைப்பாகவும் கட்சியாகவும் வளர்ந்த பிறகு அவர் கீழ்நிலையில் உள்ளோர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள். இதை படிக்கும் போது வன்னியர் தலித் மக்களுக்கிடையே தற்போது நடந்த கொண்டிருக்கும் பிரச்சனைகளும்  அதில் வன்னியர் தலைவனாக ராமதாஸும் தலித் தலைவனாக திருமாவும் உங்கள் நினைவில் வந்து போகலாம். 

இராமநாதபுரத்தில் 1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தல் நடந்த போதும் இதே நிலைமை தான். அன்று தேவர் கூட்டத்தின்  தலைவனாக முத்துராமலிங்க தேவர். அவர் தலைமை ஏற்று நடத்திய கட்சி பார்வார்டு ப்ளாக் கட்சி. ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்பொழுதுமே தேவர்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கும் இடையே ஆன சாதிக் கலவரங்கள் எறிந்து கொண்டிருக்கும். 
பட்டியல் இன மக்களுக்கென தனி கட்சியோ தலைவனோ கிடையாது. அன்று அவர்கள் அனைவரும் காங்கிரஸ் பின்னே சென்றனர்.

முத்துராமலிங்க தேவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலுக்கு ஏற்பாடு செய்தது. பார்வார்டு ப்ளாக் கட்சி சார்பாக சசிவர்ண தேவர் நின்றார். அவரே வெற்றியும் பெற்றார். ஆனால் அவர்களை எதிர்த்து நின்ற காங்கிரஸூக்கு தலித்துகள் கணிசமான ஓட்டளித்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் தேவர் குலத்தவர். பிறகு அது சாதிக் கலவரமாக மாறியது. 

மாவட்ட ஆட்சியர் சமரசம் செய்ய இரு தரப்பையும் அழைத்தார். தேவர்கள் சார்பாக முத்துராமலிங்க தேவரும், தலித்துகள் சார்பாக இமானுவேல் சேகரும் ஆஜரானர்கள். முத்துராமலிங்க தேவரால் தனக்கு சரி சமமான தலைவனாக இமானுவேலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இமானுவேல் சேகர் தேவரைவிட வயதில் மிகமிக இளையவனாக இருப்பதும் ஒரு காரணம். மாவட்ட ஆட்சியரின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. சாதிக் கலவரம் ஊர் ஊராக பரவிக்கொண்டிருந்த நேரத்தில் அதன் உச்சமாக இமானுவேல் சேகரன் பரமக்குடியில் கொலை செய்யப்பட்டார். முதல் குற்றவாளியாக முத்துராமலிங்க தேவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். பிறகு பல்வேறு காரணங்களால் அவர் விடுதலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் நடந்து அறுபது வருடங்கள் மேலாகிறது. இன்று தேவர் பூசை மூன்று நாள் அரசு விழாவாக கொண்டாடும் அளவுக்கு தேவர்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் தேவர் பூசைக்கு இணையாக இமானுவேல் சேகரனின் நினைவு நாளும் பல இடையூருகளுக்கு  நடுவே அனுசரிக்கப்படுகிறது. இன்று தலித் மக்களுக்கென்று விடுதலை சிறுத்தைகள் என்ற கட்சி உண்டு. அதற்கு திருமா என்ற தலைவன் உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றாலே கட்டப்பஞ்சாயத்து என்ற பிம்பம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஆம் கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் தான். அரசு பள்ளிகளில் படிக்க வைத்து தலித்துகளின் கல்வியறிவை மேம்படுத்தினாலும் தொழில் என்று வரும்பொழுது சிறிய அளவிலான வணிகத்தையோ அல்லது சுயதொழிலையோ நம்பித்தான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. போட்டி நிறைந்த உலகத்தில் தனது சுயதொழிலை காப்பாற்றிக்கொள்ள அரசியல் பின்புலம் தேவையாக இருக்கிறது. தலித்துகளின் உருவாகி வரும் இந்த சிறிய முதலாளிகளை காப்பாற்ற விடுதலை சிறுத்தைகள் பின்னனியில் இருந்து கட்டப்பஞ்சாயத்து செய்வது அவர்கள் கடமை. தொழிலை காப்பாற்றுவதற்கு மட்டுமல்ல தலித்துகளிடம் இருக்கும் சொற்ப நிலத்தையும் காப்பாற்றுவதற்கு இந்த கட்டப்பஞ்சாயத்து தேவை.

பல அரசியல் சமரசங்களுக்கிடையே இன்று திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், இந்த முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் போது ஸ்டாலினின் விருப்பத்திற்கேற்ப உதயசூரியனில் போட்டியிட்டுருந்தால் இந்தளவு ஒடுக்குமுறை நடக்காமல் இருந்திருக்கலாம். ஒடுக்கப்பட்டோருக்கென ஒரு இயக்கம் இருக்கிறது அதற்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை பறைசாற்றவே தனிச்சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தலுக்கு பத்து நாள் முன்பு தான் பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றாலும், மேலாத்திக்க சாதிகளின் தடைகளையும், அதற்கு துணையாக நின்ற அதிகார வர்க்கத்தின் கட்டுபாடுகளையும் தகர்தெறிந்து அவர் பெற்ற வெற்றி இமாலய சாதனையே.

அவர்கள் போக வேண்டிய தூரம் நெடியதாக இருந்தாலும் நிதானமாக அதே நேரத்தில் மிக திடமாக முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment