Thursday, June 6, 2019

மொழிக் கொள்கையும் தமிழுணர்வும் - 2

1955 ஆம் ஆண்டு ஆட்சி மொழி ஆணையம் ஒன்றை நியமிக்கிறார் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்த போது இருவரைத் தவிர அனைவரும் மகிழ்ச்சுயுடன் ஏற்றுக்கொள்கின்றனர் . ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பராயன் மற்றொருவர் மேற்கு வங்கத்தின் சுனிதா குமார் சாட்டர்ஜி. 29 மாநிலங்களை கொண்ட இந்தியாவில் ஏன் இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் இந்தியை பார்த்து அஞ்சுகின்றன?  அதற்கு காரணம் இந்த இரு மாநிலங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் தான் இந்தியாவை தவிர்த்து தன் மொழியை பேசும் மற்றொரு நாடு ஒன்று உண்டு. வங்காள மொழி மேற்கு வங்கத்திலும், வங்காள தேசத்திலும்(பங்களாதேஷ்) பேசப்படுகிறது. தமிழ் மொழி தமிழ்நாட்டிலும் இலங்கையில் ஈழத்தமிழர்களாளும் பேசப்படுகிறது. இந்த இரு மொழிகள் மட்டும் தான் மொழிப்போரை சந்தித்துள்ளது.

அன்று வங்காள தேசம் பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தது. கிழக்கு வங்கம் என்று அழைக்கப்பட்டது. 1948  ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருது மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கிறது. கிழக்கு வங்கம் கோபம் கொண்டது ஏனென்றால் அங்கு 98% மக்கள் வங்காள மொழியை பேசுபவர்கள். அவர்களால் உருதுவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 1952-இல் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் உருது மொழிக்கு எதிராக போராடுகிறார்கள். அதில் வன்முறை வெடித்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். கிழக்கு வங்கம் முழுதும் கலவர பூமியாக மாறுகிறது. வருடக்கணக்கில் நடந்த போராட்டங்களும் கலவரங்களும் அரசை அடி பணியச் செய்தது. 1956 ஆம் ஆண்டு வங்காள மொழிக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த பின்னனியில் பார்த்தால் ஏன் 1955 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி மொழி ஆணைய பரிந்துரையை மேற்கு வங்கம் எதிர்த்தது என்பது புரியும்.

1919 ஆம் ஆண்டு இலங்கையில் சர் பொன்னம்பலம் அருணாசலம் என்ற தமிழர் தலைமையில் சிலோன் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இது தமிழரும் சிங்களரும் தனித்தனியே ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய பல இயக்கங்களை உள்ளடக்கியது. இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தால் தமது ஆட்சிக்கு ஆபத்து என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள், பெருவாரியான மக்களை கொண்டத சிங்களருக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்தனர். 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பு உருவாக்கப்படுகிறது. இது அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கிறது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு இனத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இது தமிழர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஏனென்றால் இந்த அரசியலமைப்பு தமிழர்களை சிறுபான்மையினராக மாற்றுகிறது. இனி சிங்களர்கள் தமிழர்களோடு இணைய மாட்டார்கள் என்பதை தெரிந்து G.G.பொன்னம்பலம் என்பவர் தமிழர் உரிமைக்காக பாடுபட சிலோன் தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்குகிறார். சிங்களருக்கும் தமிழருக்குமான அரசியல் பிளவு இவ்வாறு தான் ஆரம்பித்தது. இந்த பின்னனியில் தான் தமிழகம் 1955 ஆம் ஆண்டு இந்தியை எதிர்த்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

1919 ஆம் ஆண்டு வரை தமிழுக்கு நண்பனாக இருந்த சிங்கள மொழி, 1931 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக எதிரியாக மாறுகிறது. இது போலவே 1955 ஆம் நண்பனாக உள்ளே நுழைய முற்படும் இந்தி பின்னாளில் எதிரியாக மாறிவிடுமோ என்ற அச்ச உணர்வே நம் இந்தி எதிர்ப்புக்கு பிரதானம். அதை விடுத்து தமிழ் மொழி மிக தொன்மையான மொழி அதனால் தான் இந்தியை எதிர்க்கிறோம் என்பது பிதற்றல். உலகில் தோன்றிய ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு இருக்கிறது. இதில் யார் மேம்பட்டவர் யார் முதன்மையானவர் என்று கேட்பது சிறுபிள்ளைத்தனம்.

இந்த ஆண்டு இந்தி திணிப்பு வருகிற போது முதலில் உச்ச குரலில் எதிர்ப்பு தெரிவித்தது தமிழகமே. ஏனென்றால் தமிழ் சிறுபான்மையினர் மொழியாக கருதப்பட்டதால் இலங்கையில் ஒரு லட்சம் உயிர்களை பலி கொடுத்துள்ளோம். தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகமும், மேற்கு வங்கமும் குரல் கொடுக்கிறதென்றால் அது அரசியல் சார்ந்தது. அங்கு பாஜக காலூன்றி விட்டது. ஆனால் தமிழகத்தில் தமிழ் சிறுபான்மையான மொழியாக மாறிவிடக்கூடாது என்ற அச்ச உணர்வே எதிர்ப்பு குரலாக மாறுகிறது.
இந்தி பிரசார சபா ப்ராத்மிக், மதியமா போன்று இந்தி வகுப்புகள் நடத்தி வருடந்தோறும் நான்கு லட்சம் பேர் இந்தியில் தேர்ச்சி பெற வைக்கிறது. அதன் தலைமை அலுவலகம் சென்னையில் தான் உள்ளது. 1936 ஆம் ஆண்டு முதல் இயங்கிக்கொண்டிருக்கிறது எவ்வித பிரச்சனையின்றி. இங்கு 4000 CBSE பள்ளிகள் இயங்குகின்றன. அதனால் தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்வது பிரச்சனையில்லை. ஆனால் அரசு ஆணையாக ‘இந்தி’ வருகிற போது அது அரசியல் ஆகிறது. ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. வங்காள தேசத்தில் நடந்தது போல, இலங்கையில் நடந்தது போல். அது தமிழ்நாட்டில் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.

கட்டுரைக்கு உதவிய நூல் - தமிழக அரசியல் வரலாறு - ஆர்.முத்துக்குமார் மற்றும் wikipedia.

Monday, June 3, 2019

மொழிக் கொள்கையும் தமிழுணர்வும் -1

மொழிக் கொள்கை பற்றி நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையில் சில நாடுகளை பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன்.முதலில் அமெரிக்கா.
ஏன் அமெரிக்காவில் பிறக்கும் இந்தியா வம்சாவளி குழந்தையை நாம் ABCD(America Born Confused Desi) என்று அழைக்கிறோம். ஏனென்றால் வீட்டில் ஒரு மொழி. வெளியே வேறொரு மொழி. வீட்டில் ஒரு கலாச்சாரம். வெளியே ஒரு கலாச்சாரம். அந்த குழந்தை குழம்பிப் போகிறது.

நான் அமெரிக்காவில் பணிபுரிந்ததால் என் அனுபவத்தை பகிர விரும்புகிறேன். நான் பார்த்த வரையில் தமிழ் குடும்பத்தில் பிறந்த குழந்தை ‘அம்மா’, ‘தாத்தா’ என்று ஆர்ம்பித்து ஒவ்வொரு வார்த்தையாக பேச ஆரம்பிக்கும். பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளில் ஓரளவு தமிழ் கற்றுக்கொள்ளும். ஆனால் ஐந்து வயதில் பள்ளியில் காலடி வைத்தவுடன் பெற்றோர்கள் தமிழில் கேள்வி கேட்டால் குழந்தை ஆங்கிலத்தில் பதில் சொல்லும். தமிழில் பேச சொல்லி பெற்றோர்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் அது தமிழில் பேசாது. அமெரிக்காவில் எல்லா மாகாணங்களிலும் தமிழ்ச் சங்கம் உள்ளது. ஏனென்றால் அங்கிருக்கும் பெற்றோர்களுக்கு நம் மொழியும் கலாச்சாரமும் நம்முடன் அழிந்து விடுமோ என்ற பதட்டம் உள்ளது. பரதம் கற்றுகொடுப்பார்கள். வயலின் கற்றுக்கொடுப்பார்கள். பட்டுப்பாவாடை அணிவிப்பார்கள். ஆனால் குழந்தைகளுக்கு தமிழ் உச்சரிப்பு மட்டும் வரவே வராது. அமெரிக்காவில் நடந்து கொண்டிருப்பது தமிழ் வகுப்பு அல்ல தமிழ் திணிப்பு.

அமெரிக்காவில் நான்கு தமிழ் குடும்பங்கள் ஒன்று சேரும்போது ‘நான் ஊர்ல இருக்கறப்போ’ என்று அவர்கள் ஆர்ம்பிக்கும் போது முகத்தை பார்க்க வேண்டும். அவ்வளவு பிராகசமாய் இருக்கும். இது நான் மிளௌரியில்(Missourie) கண்ட காட்சி. தன் ஊரை பற்றி தன்னுடைய மொழியில் பேசும் போது மட்டும் ஏன் அவர்கள் முகம் மலர்கிறது? 'when I was in my town' என்று ஆர்ம்பித்திருக்க வேண்டியதுதானே? இதற்கு விடை வேண்டுமென்றால் அதற்கு மொழி என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். இதற்கான விடையை உங்கள் மூளையிடம் கேட்டால் ‘மொழி என்பது கருத்தை மனதில் உருவாக்கவும் அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள உதவும் கருவி ’ என்று தட்டையாக பதில் சொல்லும். ஆனால் மனமோ  ’மொழி என்பது உணர்வுகளின் வெளிப்பாடு’ என்று கூறும். எது சரியான பதில் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெற்றோர்களும் அவர்கள் சுற்றியுள்ள நான்கு குடும்பங்களும் தமிழில் பேசினால் அவர்கள் குழந்தைகளும் தமிழ் பேசும் என்று நம்புவது யதார்த்தத்தில் உண்மையில்லை. முதலில் மொழி மறையும். பிறகு உணவுப் பழக்கம் மாறும். ஏனென்றால் அமெரிக்கர்களுக்கு சமைக்கும் பழக்கும் கிடையாது. நான்காவது தலைமுறை வளரும் போது அங்கு தமிழ் குடும்பம் இருந்ததற்கு எந்த அடையாளமும் இருக்காது. இந்த உண்மை உறுத்திக்கொண்டிருப்பதால்  தான் அங்கு கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பெரும்பாலான சர்ச்சைகள் மீண்டும் இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பிச் செல்வது பற்றியே இருக்கும்.

அமெரிக்காவில் தமிழ் கற்றல் என்பது மொழி சார்ந்த பிரச்சனை அல்ல இது நிலம் சார்ந்த பிரச்சனை. ஒவ்வொரு தலைமுறையும் முன்னேறும் போது தனக்கு  தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை விலக்கிவிடும். இது இயற்கையின் நியதி. அமெரிக்க வாழ் குழந்தைகளுக்கு தமிழ் என்பது தேவையற்ற ஒன்று. அதனால் தான் பெற்றோர்களின் வற்புறுத்தலால் தமிழ் வகுப்புகளுக்கு சென்றாலும் அவர்களுக்கு அதில் நாட்டம் இருப்பதில்லை. நாளடைவில் தமிழை மறந்தும் விடுகிறார்கள்.

ஒன்றை பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டும். இது இயற்கையின் மற்றொரு நியதி. இந்தியாவில் இருந்து அமெரிக்கா புலம் பெயர்ந்த அனைத்து குடும்பங்களும் அடைந்தது மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம். இழந்தது அவர்களுடைய மொழியை. அதனோடு இயைந்த பண்பாட்டை. தான் பெற்ற நன்மைக்காக தான் இழந்தது சரியானதா என்று அவர்கள்  தான் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

ஒரு மொழியை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத்தேவையில்லை. உன் தாய் மண்ணை விட்டு வெளியேறினால் போதும். இரண்டு மூன்று தலைமுறைகளில் அது தானாக அழிந்து விடும். இது தான் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன் மொழி கற்றல் என்பது மொழி சார்ந்த பிரச்சனையல்ல நிலம் சார்ந்த பிரச்சனை.

(தொடரும்)