Thursday, June 6, 2019

மொழிக் கொள்கையும் தமிழுணர்வும் - 2

1955 ஆம் ஆண்டு ஆட்சி மொழி ஆணையம் ஒன்றை நியமிக்கிறார் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்த போது இருவரைத் தவிர அனைவரும் மகிழ்ச்சுயுடன் ஏற்றுக்கொள்கின்றனர் . ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பராயன் மற்றொருவர் மேற்கு வங்கத்தின் சுனிதா குமார் சாட்டர்ஜி. 29 மாநிலங்களை கொண்ட இந்தியாவில் ஏன் இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் இந்தியை பார்த்து அஞ்சுகின்றன?  அதற்கு காரணம் இந்த இரு மாநிலங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் தான் இந்தியாவை தவிர்த்து தன் மொழியை பேசும் மற்றொரு நாடு ஒன்று உண்டு. வங்காள மொழி மேற்கு வங்கத்திலும், வங்காள தேசத்திலும்(பங்களாதேஷ்) பேசப்படுகிறது. தமிழ் மொழி தமிழ்நாட்டிலும் இலங்கையில் ஈழத்தமிழர்களாளும் பேசப்படுகிறது. இந்த இரு மொழிகள் மட்டும் தான் மொழிப்போரை சந்தித்துள்ளது.

அன்று வங்காள தேசம் பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தது. கிழக்கு வங்கம் என்று அழைக்கப்பட்டது. 1948  ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருது மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கிறது. கிழக்கு வங்கம் கோபம் கொண்டது ஏனென்றால் அங்கு 98% மக்கள் வங்காள மொழியை பேசுபவர்கள். அவர்களால் உருதுவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 1952-இல் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் உருது மொழிக்கு எதிராக போராடுகிறார்கள். அதில் வன்முறை வெடித்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். கிழக்கு வங்கம் முழுதும் கலவர பூமியாக மாறுகிறது. வருடக்கணக்கில் நடந்த போராட்டங்களும் கலவரங்களும் அரசை அடி பணியச் செய்தது. 1956 ஆம் ஆண்டு வங்காள மொழிக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த பின்னனியில் பார்த்தால் ஏன் 1955 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி மொழி ஆணைய பரிந்துரையை மேற்கு வங்கம் எதிர்த்தது என்பது புரியும்.

1919 ஆம் ஆண்டு இலங்கையில் சர் பொன்னம்பலம் அருணாசலம் என்ற தமிழர் தலைமையில் சிலோன் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இது தமிழரும் சிங்களரும் தனித்தனியே ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய பல இயக்கங்களை உள்ளடக்கியது. இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தால் தமது ஆட்சிக்கு ஆபத்து என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள், பெருவாரியான மக்களை கொண்டத சிங்களருக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்தனர். 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பு உருவாக்கப்படுகிறது. இது அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கிறது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு இனத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இது தமிழர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஏனென்றால் இந்த அரசியலமைப்பு தமிழர்களை சிறுபான்மையினராக மாற்றுகிறது. இனி சிங்களர்கள் தமிழர்களோடு இணைய மாட்டார்கள் என்பதை தெரிந்து G.G.பொன்னம்பலம் என்பவர் தமிழர் உரிமைக்காக பாடுபட சிலோன் தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்குகிறார். சிங்களருக்கும் தமிழருக்குமான அரசியல் பிளவு இவ்வாறு தான் ஆரம்பித்தது. இந்த பின்னனியில் தான் தமிழகம் 1955 ஆம் ஆண்டு இந்தியை எதிர்த்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

1919 ஆம் ஆண்டு வரை தமிழுக்கு நண்பனாக இருந்த சிங்கள மொழி, 1931 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக எதிரியாக மாறுகிறது. இது போலவே 1955 ஆம் நண்பனாக உள்ளே நுழைய முற்படும் இந்தி பின்னாளில் எதிரியாக மாறிவிடுமோ என்ற அச்ச உணர்வே நம் இந்தி எதிர்ப்புக்கு பிரதானம். அதை விடுத்து தமிழ் மொழி மிக தொன்மையான மொழி அதனால் தான் இந்தியை எதிர்க்கிறோம் என்பது பிதற்றல். உலகில் தோன்றிய ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு இருக்கிறது. இதில் யார் மேம்பட்டவர் யார் முதன்மையானவர் என்று கேட்பது சிறுபிள்ளைத்தனம்.

இந்த ஆண்டு இந்தி திணிப்பு வருகிற போது முதலில் உச்ச குரலில் எதிர்ப்பு தெரிவித்தது தமிழகமே. ஏனென்றால் தமிழ் சிறுபான்மையினர் மொழியாக கருதப்பட்டதால் இலங்கையில் ஒரு லட்சம் உயிர்களை பலி கொடுத்துள்ளோம். தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகமும், மேற்கு வங்கமும் குரல் கொடுக்கிறதென்றால் அது அரசியல் சார்ந்தது. அங்கு பாஜக காலூன்றி விட்டது. ஆனால் தமிழகத்தில் தமிழ் சிறுபான்மையான மொழியாக மாறிவிடக்கூடாது என்ற அச்ச உணர்வே எதிர்ப்பு குரலாக மாறுகிறது.
இந்தி பிரசார சபா ப்ராத்மிக், மதியமா போன்று இந்தி வகுப்புகள் நடத்தி வருடந்தோறும் நான்கு லட்சம் பேர் இந்தியில் தேர்ச்சி பெற வைக்கிறது. அதன் தலைமை அலுவலகம் சென்னையில் தான் உள்ளது. 1936 ஆம் ஆண்டு முதல் இயங்கிக்கொண்டிருக்கிறது எவ்வித பிரச்சனையின்றி. இங்கு 4000 CBSE பள்ளிகள் இயங்குகின்றன. அதனால் தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்வது பிரச்சனையில்லை. ஆனால் அரசு ஆணையாக ‘இந்தி’ வருகிற போது அது அரசியல் ஆகிறது. ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. வங்காள தேசத்தில் நடந்தது போல, இலங்கையில் நடந்தது போல். அது தமிழ்நாட்டில் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.

கட்டுரைக்கு உதவிய நூல் - தமிழக அரசியல் வரலாறு - ஆர்.முத்துக்குமார் மற்றும் wikipedia.

1 comment:

  1. துரோகி எதிரி என்கிற ரீதியில் என் பார்வையும் எழுத்தும் உள்ளது. மோடிக்கு நம் தமிழகத்திற்கும் எந்த தொடர்புமில்லை. அவரை இயக்குவது பெரிய அஜண்டா உள்ள ஒரு கும்பல். அவர் விரும்பினாலும்விரும்பாவிட்டாலும் அடிபணிந்துதான் போக வேண்டும். ஆனால் இங்குள்ள கல்வி வியாபாரிகள், சாராய வியாபாரிகள் எந்த அளவுக்கு கடந்த 25 ஆண்டுகளில் நம் சமூக மாற்றங்களுக்கு உதவி உள்ளார்கள்? தமிழ் மொழி மேல் உண்மையான அக்கறை கொண்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதனை நீங்க சொல்லுங்க?

    ReplyDelete