Monday, April 5, 2021

அரசியல் கட்டமைப்பு-2 (என் கனவு ஜனநாயகம்)

 எனது கொள்கை Decentralization.  தமிழில் அதிகார பரவலாக்கல் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு தேர்தலில் போதும் இதே யோசனைதான். உண்மையிலேயே அதிகார பரவலாக்கல் என்பது பொருளாதாரத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். இன்று நாம் அதிகார குவியலின் உச்சத்தில் இருக்கிறோம். மத்தியில் பாஜகவா காங்கிரஸா, மாநிலத்தில் திமுக-வா அதிமுக-வா என்று ஒருமனதாக அனைத்து தரப்பு மக்களும் யோசிக்கும் போதே அதிகார குவியலின் உச்சத்தை தொட்டு விட்டோம் என்றுதான் அர்த்தம். இந்த அதிகார குவியலுக்கு அடித்தளமாக இரு தரப்பு மக்கள் தேவை படுகிறது.


ஒன்று வறுமையில் வாடி அரசாங்கத்தை கையேந்தி நிற்பவர்கள். இன்னொன்று நான் படித்தேன் நான் சம்பாதிக்கிறேன்,என் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் நான் மட்டும் தான் காரணம் என்று நவநாகரிக நகர்ப்புற புத்திசாலிகள்.

சமூகம் என்று ஒன்று உண்டு. நான் நல்லாயிருக்க வேண்டும் என்றால் நான் இருக்கும் சமூகம் நல்லாயிருக்க வேண்டும். அதற்கு இந்த சமூகத்தில் உள்ள பிரச்சனைகள், அதன் மூலகாரணம், அதற்கான தீர்வுகள் பற்றி ஒரு தெளிவு இருந்து, இங்கு நடைமுறையில் உள்ள அரசியல் பற்றி புரிதல் இருக்க வேண்டும்.


இங்கு சமூகம் என்று எதை குறிப்பிடுகிறேன்?

சாதியா? இல்லை, மதமா? இல்லை, மொழியா? இல்லை, திராவிடமா? இல்லவே இல்லை. சமூகம் என்பது எனது ஊர். என் சொந்த ஊர் ஈரோடு. நான் படித்து வளர்ந்தெல்லாம் ஈரோடு தான். ஆனால் ஈரோட்டை பற்றி அதிகபட்சமாக பத்து சதவிதம் தான் தெரியும்.

உண்மையில் அரசியல் மாற்றம் வேண்டுமென்று என்று ஒருவன் விரும்பினால், தன் ஊரை பற்றி தான் முதலில் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும். உலக அரசியல், இந்திய வரலாறு, சே குவாரா, கம்யூனிசம் பற்றி படிப்பது ஒருவன் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள உதவுமே தவிர எந்த மாற்றத்தையும் கொண்டு வராது.அர்ஜென்டினாவில் பிறந்த சே குவாராவிற்கு வேண்டுமானால்

க்யூபாவில் மாற்றத்தை கொண்டு வர காலம் அமைந்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மையோர் மாற்றம் வேண்டும் என்று  நினைக்கும் இக்காலத்தில், பெரும்பான்மையோர் இந்த மாற்றத்தில் பங்கு கொள்ள தன் ஊரில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

மாற்றம் என்று தன்னிடமிருந்து, தான் இருக்கும் இடத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்.


அதிகார குவியலில் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது?

சாமனிய மக்கள் அனைவரும் அரசாங்கத்திடம் வரி செலுத்துகிறோம். அது நேரடியாக மத்திய அரசுக்கு செல்கிறது. அதில் பங்கு பிரித்து அலைக்கழித்து மாநில அரசுக்கு தருகிறது. மாநில அரசிடமிருந்து அந்த பணம் அடித்தட்டு மக்களின் நலத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, அது அந்த மக்களின் கைக்கு சென்று சேர்வதற்குள் இருபது கைகள் மாறிவிடுகின்றன. மாநிலத்தில் இருக்கும் ஒரு அமைச்சர் பல்லாயிரம் கோடி ஊழல் செய்கிறார் என்றால் அதற்கு இந்த பொருளாதார கட்டமைப்பு மிகவும் துணை புரிகிறது. 


மக்களுக்கான பல நல்ல திட்டங்கள் இருக்கிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் மக்களிடம் அந்த திட்டம் முழுமையாக சென்று சேருகிறதா? மக்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களும் சேவைகளும் தரமாக இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே.

இதை எப்படி சரி செய்வது? கையேந்தும் மக்கள் ஏதாவது கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். பொருளாதாரத்தில்  மேன்மை அடைந்தவர்கள் நான் என் வரியை ஒழுங்காக கட்டிவிட்டேன் அதனுடன் என் கடமை முடிந்தது என்று நினைக்கிறார்கள்.

இப்படி இருக்க நலத்திட்டங்களை கொடுப்பவன் கொள்ளையடிக்க தானே செய்வான்.

நகர்ப்புறத்தாரின் சமூக அக்கரை- இப்போது சமீபத்தில் நடந்த் ஜல்லிக்கட்டு போராட்டம், சென்னை வெள்ளப்பெருக்கு போன்றவை நகரத்தார் இடையை சமூக அக்கரையை கொண்டு வந்துள்ளது உண்மையில் சந்தோஷம் அளிக்கிறது. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள நண்பர் வார இறுதியில் மரம் நடுவதற்கு செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இது தொடக்கம் மட்டும் தான். 

அறப்போர் இயக்கம் போன்றவர்கள் RTI மூலம் அரசில் நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவது, உண்மையில் பாரட்டதக்கது. ஆனால் இது பெரும்பான்மையான மக்களின் கடமையாக மாற வேண்டுமென்றால் வரி செலுத்தும் போதே அதில் சமூக பொறுப்பையும் உள்ளடக்க வேண்டும். எவ்வாறு? ஈரோட்டில் புதிதாக ஒரு அரசு பள்ளி கட்டப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

எனக்கு குறுஞ்செய்தி வருகிறது 'நீங்கள் செலுத்திய வரிப்பணத்தில் உங்கள் ஊரில் அரசு பள்ளி கட்ட உபயோகப்பட்டுள்ளது. நாளை அதன் திறப்பு விழா. குடும்பத்துடன் கலந்து கொள்ளவும்'. அது அளப்பரிய ஆனந்தத்தை கொடுக்கும். நிச்சயமாக அதன் திறப்பு விழாவிற்கு செல்வேன். என கண்ணிற்கு அது அரசு கட்டிய அரசாங்க பள்ளியாக தெரியாது. அரசு கட்டிய என் பள்ளியாக தான் தெரியும். 

சில மாதங்களில் அந்த பள்ளி தரமற்றதாக கட்டிய விபரம் தெரியவருகிறது. இப்போது என்ன செய்வேன்? இதுவரை அரசாங்கத்தை குறை கூறுவதை மட்டுமே செய்து கொண்டிருந்த நான், இந்த அரசு பள்ளியில் தரமான கட்டிடமும் தரமான கல்வியும் எவ்வாறு தருவது என்று யோசிப்பேன். இது தனிமனிதனாக செய்ய முடியாது ஆகையால் இந்த பள்ளி கட்ட யாருடைய வரிப்பணமெல்லாம் செலவிடப்பட்டுள்ளது என்று தேடுவேன். அவர்கள் ஒன்றிணைத்து whatsapp குழு ஒன்று உருவாக்குவேன். RTI மூலம் தேவையான

தகவல்கள் சேகரிப்பேன். இப்போது குழுவாக உள்ள நாங்கள், அரசிடம் அழுத்தம் கொடுப்போம். இப்படி அரசு பள்ளிகள் ஒவ்வொன்றிக்கும்

ஒரு whatsapp குழுக்கள் இருக்கும். இவர்கள் அனைவரும் கொடுக்கும் அழுத்தத்தில் அரசு தானாக தரமான கல்வி கொடுத்து தான் ஆக வேண்டும்.

இப்போது நடைமுறை எப்படி இருக்கிறதென்றால் ஸ்டாலினோ சீமானோ எடப்பாடி பழனிசாமியோ ஒருவர் முதல்வராக வந்தால் அந்த ஒருவரே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விடுவார் என்ற நம்பிக்கை. இது தமிழ் சினிமாவை பார்த்து நமக்கு ஏற்பட்ட மன்ப்பிறழ்வு. ஒரு ஹீரோவே எல்லா வில்லன்களையும் அடித்து விரட்டுவது சினிமாவில் மட்டும் தான் சாத்தியம்.

நிஜ வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்சனை தீர்ப்பதற்கே பல பேர் ஒன்று சேர வேண்டும்.


கனவு தொடரும்-------

ரமேஷ் தியாகராஜன்.


2 comments: