Friday, July 26, 2019

அரசியல் கட்டமைப்பு - 1

என் பெயர் ரமேஷ் தியாகராஜன். எனது கொள்கை அதிகார பரவலாக்கல். ஆங்கிலத்தில் Decentralization என்று சொல்லலாம். நான் விரும்பும் பொருளாதாரம் கிராமிய பொருளாதாரம். எனக்கு பிடித்த பொருளாதார நிபுணர் ஜெ.சி.குமரப்பா. இந்த தெளிவு ஏற்பட எனக்கு 35 வருடங்கள் ஆகியது.

இங்கு தேசியவாதம், மொழிவாதம், மதவாதம், சினிமா, அரசியல், கிரிக்கெட் என்று பலவித வண்ணக்கண்ணாடிகள் இருக்கின்றன. இதின் ஏதேனும் கண்ணாடி எடுத்துக் மாட்டிக் கொள்பவன் வாழ்க்கை முழுக்க ஒரு தலை பட்சமாக பேசித்தான் ஆக வேண்டும். இந்தியனா தமிழனா, மதமா சாதியா, விஜய்யா அஜித்தா, ஸ்டாலினா சீமானா, கோலியா தோனியா இப்படி ஏதேனும் சார்பெடுத்து பேசுபவனை பாரத்தால் கண்ணாடி அணியாதவனுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். மஞ்சள் கண்ணாடி அணிந்தவனுக்கு உயிருள்ளவரை உலகம் மஞ்சளாகதான் இருக்கும். கண்ணாடி அணியாதவனுக்கு உலகம் உள்ளது உள்ளபடி பல வண்ணங்களாக தெரியும்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு வசனம் - ‘இந்தியன்னா பெருமை கொள்ளனும்
தமிழன்னா தலை நிமிர்ந்து நிக்கனும்
ஆனா சாதி சொன்னா வெட்கப்படணும்...எல்லாமே கூட்டம் தானே. அது பெருசு இது சிறுசு!!!
தேசத்துக்கு பக்தி,
மொழிக்கு பற்று,
ஆனா சாதிக்கு வெறி!!!’. திருக்குறளை போன்றே மிக ஆழ்ந்த அர்த்தமுள்ள வசனம். எந்த கூட்டத்தில் நான் என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேனோ அந்த கூட்டத்தின் எண்ணிக்கையை பொறுத்தே எனக்கான நியாய தர்மங்கள் இங்கு வகுக்கப்பட்டுள்ளன. பைபிளின் வசனம் பேசாமல் இங்கு யாரும் அமெரிக்கா ஜனாதிபதி ஆக முடியாது. இந்துத்துவா பேசாமல் மோடியால் பிரதமாராக முடியாது. ஒரு நாட்டின் தலைவன் மக்கள் நலனை முன்னிறுத்தாமல் ஏன் மதத்தை முன்னிறுத்துகிறான்? காரணம் மதம் மக்களுக்கு புரியாது. ஆனால் மக்கள் அதை நம்புவார்கள். புரியாத மதத்தை ஏன் மக்கள் நம்ப வேண்டும்? அப்பொழுது தான் தேசம் என்ற கட்டமைப்பை நம்புவார்கள். தேசப்பற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது கடினமான காரியம். ஆனால் கோயில்கள் மூலம், சடங்குகள் மூலம் மதத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம். இந்தியா இந்து மதத்தை தழுவியது. பாகிஸ்தான் இஸ்லாமிய மதத்தை தழுவியது. இலங்கை புத்த மதத்தை தழுவியது. இப்படி ஒவ்வொரு நாடும் அதற்கான மதத்தையும் சொல்லிக்கொண்டே போகலாம். நாடும் மதமும் வேறுவேறல்ல. இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

சரி. இந்துவாக பிறந்ததில் பெருமை கொள்கிறீர்களா? அப்படியெனில் பகவத் கீதையில் இருந்து ஒரு ஸ்லோகம் சொல்லுங்கள்? தெரியவில்லையா. சரி. வேதத்தில் இருந்து ஒரு வரி சொல்லுங்கள்? தெரியவில்லையா. பரவாயில்லை. உங்களுக்கு என்ன தெரியும் என்று சொல்லட்டுமா? எல்லொருக்கும் சொந்த ஊர் என்று உண்டு. அந்த ஊரில் மாரியம்மன் கோவில் என்று ஒன்று உண்டு. திருவிழாவின் போது எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘செல்லத்தா செல்ல மாரியத்தா, எங்க சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா’, ‘கற்பூர நாயகியே கனகவல்லி, காளி மகமாயி கருமாரியம்மா’. பக்கத்து வீட்டுக்காரருடன் பழனிக்கு பாத யாத்திரை போயிரிப்பீர்கள், டி.எம்.எஸ்ஸின் ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ பாடல் கேட்டிருப்பீர்கள். இதுதான் நமக்கு தெரிந்த இந்து மதமும் பக்தியும். ஆனால் இதை வைத்து அரசியல் செய்ய முடியாது.

நான் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைத்தால், தமிழ் தேசியவாதிகளை எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு அழைக்கவும். நாலடியாரிலிருந்து நான்கு வரிகள் கூறவும்?...தெரியவில்லையா. பரவாயில்லை கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே, எங்கே கம்பராமயணத்திலிருந்து ஒரு பாடல் சொல்லவும்? ஞாபகம் வரவில்லையா. பரவாயில்லை. எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதிணெண் கீழ்கணக்கு என்பார்களே. அவை யாவை என்று தெரியுமா? கவலைப்பட வேண்டாம். எனக்கும் இது எதுவும் தெரியாது. முதல் வகுப்பில் குறள் படிப்பதால் அது மட்டும் கொஞ்சம் தெரியும். தமிழனாக பிறந்ததால் இவையனைத்தையும் மாய்ந்து மாய்ந்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தமிழ் பண்டிதர்களின் வேலை. இப்படி தமிழ் பெருமை பேசும் எந்த நூலும் நாம் மனதில் நிற்காத போது நாம் எப்படி தமிழ் தேசியத்திற்கு மயங்குகிறோம். பொதுமக்களுக்கு எது தெரியாதோ எது புரியாதோ அதை வைத்து தான் அரசியல் நடத்த முடியும். இது அரசியலின் அடிப்படை விதி. இது திராவிட கட்சிகளுக்கும் பொருந்தும்.
மொழி என்பது மாநில அரசியல் மட்டும் அல்ல. அது சூழ்நிலைக்கேற்றவாறு தேச அரசியலாகவும் மாறும். இஸ்லாமிய மதத்தை முன்னிறுத்தி முதலில் கிழக்கு வங்கம் உருவானது. பிறகு உருது மொழி திணிக்கப்பட்டதால் வங்காள தேசம் என்று மொழியை அடிப்படையாக கொண்டு தேசம் உருவானது.
இதிலிருந்து தேசம், மதம், மொழி, அரசியல் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளது என்பது மக்களுக்கு புரியும்.

உங்கள் வாழ்க்கையை சற்றே திரும்பிப் பார்த்து தேசப்பற்று மிக்க காரியங்கள் என்னவெல்லாம் செய்துள்ளீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இரண்டு விஷயங்களை செய்து இருப்பீர்கள். ஒன்று பள்ளியிலோ திரையரங்கிலோ ஜன கன மன என தேசிய கீதம் பாடும் போது அசையாமல் நின்று இருப்பீர்கள். இன்னொன்று கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வெல்லும் போது துள்ளிக்குதித்து உங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தி இருப்பீர்கள். VGP, Kishkinta போன்ற தீம் பார்க் சென்றால் அங்கு நீர் விளையாட்டு இருக்கும். ஒரு படகில் மெதுவாக உச்சிக்கு கொண்டு செல்வார்கள். உச்சிக்கு சென்றவுடன் அந்த படகு அதி வேகமாக நீருக்குள் பாய்ந்து செல்லும். அப்போது கிடைக்கும் திரில், இந்தியா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெறும் திரில்லை விட பல மடங்கு அதிகம். நல்ல வேலையாக தீம் பார்க்கில் என்னுடைய தேசப்பற்று பல மடங்கு அதிகரித்து விட்டது என்று எண்ணாமல் இருந்தீர்களே. அது வரை மகிழ்ச்சி. கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் தேசப்பற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயித்தால் மாநிலப்பற்று. அருமை. உங்கள் பற்றை நினைத்து புல்லரிக்கிறேன். உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் கிரிக்கெட்டில் ஜெயிப்பதற்க்கும் தேசப்பற்றுக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா என்று.
அடுத்தது தேசிய கீதம். உங்கள் வாழ்க்கையில் எத்தனை முறை தேசிய கீதம் கேட்டிருப்பீர்கள். என்றாவது ஒரு நாள் அதன் அர்த்தம் என்னவென்று யோசித்திருப்பீர்களா??  ஏன்  யோசிக்கவில்லை? ஏனென்றால் அது தேவையில்லை. தேசிய கீதத்திற்கு நிற்கவில்லையென்றால் அது தேசத்தை அவமதிப்பது என்று பயிற்றுவிக்கப்பட்டுள்ளீர்கள். அதனால் எழுந்து நிற்கிறீர்கள். எல்லோரும் நிற்கிறார்கள் அதனால் நீங்களும் நிற்கிறீர்கள். அதுவே உண்மை.

பிரச்சனையில்லாத உலகத்தை உருவாக்க முடியும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கூட்டத்தின் அளவை பொருத்து பிரச்சனையின் அளவும் பெரிதாக இருக்கும் என்பதை நம்புகிறேன். என்னுடைய கனவு நாம் தேச அளவிலோ, மாநில அளவிலோ, சாதி அளவிலோ ஒன்றாக இணைவதை விட ஊர் அளவில் ஒன்றாக இணைவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இரு ஊருக்கு இடையே ஒரு வாய்க்கால் சண்டை வருகிறது என்று வைத்து கொள்வோம். இரு ஊருக்குமிடையே கலவரம் வெடித்தால் அங்கு சண்டை போடும் ஒவ்வொருவருக்கும் யாரு நம்ம ஊர்காரன் யார் அடுத்த ஊர்காரன் என்பது தெளிவாக தெரியும். ஏனென்றால் ஒருவரையொருவர் தெரிந்து கொள்வது அவர்கள் வாழும் வாழ்வியலோடு இயல்பாக வருவது. ஆனால் ஒரு தேசத்திற்காக போருக்கு சென்றால் நீங்கள் இந்தியனா, பாகிஸ்தானா என்பதை உங்கள் உடை தான் தீர்மானிக்கும். நீங்கள் இந்திய ராணுவ உடை அணிந்தால் இந்திய வீரர். பாகிஸ்தான் உடை அணிந்தால் பாகிஸ்தான் வீரர். அவ்வளவே.

பள்ளிகளில் எதற்கு யூனிபார்ம் உடை கொடுக்கிறார்கள்?
ஏழை பணக்காரன் வித்தியாசம் தெரியக்கூடாது என்பதற்க்காக.
மிக அருமையான பதில். உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள். நீங்கள் பள்ளியில் படிக்கும் போது உங்களுடன் படித்த மாணவர்களில் யார் பணக்காரன்? யார் ஏழை என்று உங்களுக்கு தெரியாதா? ஒரு மாணவன் அணிந்திருக்கும் கை கடிகாரம், அவன் உபயோகிக்கும் ஸ்கூல் பேக், லஞ்ச் பாக்ஸ், மாலை நேரத்தில் அவனை கூட்டி செல்ல வரும் வாகனம் சைக்கிளா, காரா என்பதை வைத்து அவன் பணக்காரானா ஏழையா என்பது முதல் நாளே அப்பட்டமாக தெரிந்துவிடும். ஒரு ஆங்கிலப் பள்ளியில் ஏழைகளை மட்டும் துல்லியமாக கண்டுபிடிக்க வேண்டுமா. அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் கல்விக் கட்டணம் செலுத்தாதவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்புக்கும் அனுப்பப் பட்டு அந்த மாணவர்களின் பெயர் அனைவரின் முன்பும் வாசிக்கப்படும். அது தான் எப்படியாவது படித்து முன்னேறி வெற்றி பெறலாம் என்று கனவு காணும் ஏழை அல்லது நடுத்தர கூட்டம். இப்படி இருக்க யூனிபார்ம் என்பது ஏழை பணக்காரன் வித்தியாசம் தெரியக்கூடாது எனபதற்காக கொடுக்கப்பட்டது என்று சொல்வது வேடிக்கையாக இல்லை.

ஒரு தேசத்தின் கட்டமைப்பில் நாம் அணியும் உடை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளை உடை அணிந்தால் மருந்துவர். காக்கி உடை அணிந்தால் காவலாளி. கருப்பு அங்கி அணிந்தால் அவர் வக்கில். நீங்கள் உண்மையில் மருத்துவராக இருந்து மக்களுக்கு சேவை செய்ய நோக்கத்துடன் தனியாக க்ளீனிக் வைத்தால், வெள்ளை உடை அணிய தேவையில்லை. ஏனென்றால் அந்த ஏரியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் நீங்கள் டாக்டர் என்று தெரியும். அதுவே நீங்கள் மல்டிஸ்பெஸாலிட்டி மருத்துவமனையில் வேலை செய்தால் நிச்சயமாக வெள்ளை உடை அணிய வேண்டும். ஏனென்றால் அங்கு சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பல மருத்துவர்களில் நீங்களும் ஒருவர். மேனஜ்மென்ட் சொல்லும் மருந்துகளை சிபாரிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் நேரத்தில் வர வேண்டும் போக வேண்டும். இது சரிதானா என்று சிந்தியுங்கள்.

ஐடி துறையில் வேலை செய்பவரா நீங்கள்? மற்ற துறை போன்று உங்களுக்கென்று யூனிபார்ம் உடை இல்லை என்று பெருமை படுகிறீர்களா? நிற்க!!!
மற்ற துறையிலாவது யுனிபார்ம் உடை அணிந்தாலும் அவனுக்கென்று சொந்தமாக ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் ஐடி துறையில் நீங்கள் கம்பெனிக்குள் நுழையும் முன் கார்த்திக். நுழைந்த பிறகு 845679(ஏதோ ஒரு நம்பர் மட்டுமே). எங்கெல்லாம் நீங்கள் உடைகளாகவும் நம்பராகவும் மாற்றப் படுகிறீர்களோ அங்கெல்லாம் உங்களுடைய தனித்தன்மைக்கு ஆப்பு வைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். அப்படியென்றால் ஆதார் நம்பர் எதை குறிக்கிறது என்று சிந்தியுங்கள்.

கிராமிய கலைகளுக்கும் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒன்றின் வீழ்ச்சி. மற்றொன்றின் வளர்ச்சி. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், நாடகம், பறையாட்டம், வில்லுப்பாட்டு என்று பன்முகமாகமான கிராமிய கலைகளை ஒன்றாக குவித்து பொழுதுபோக்கு குவியலாக உருவானதே சினிமா. ஒரு நாட்டுபுறக் கலை நிகழ்ச்சி ஒரு கிராமத்தில் நடக்கிறதென்றால் அங்கு அந்த கலைக்காக ஒரு குடும்பம் வாழ்கிறது என்று அர்த்தம். அவ்வாறு தமிழகத்தில் உள்ள பத்தாயிரம் கிராமங்களிலும் பத்தாயிரம் கலைக்குடும்பங்கள் இருந்த காலம் இருந்தது. வருமானம் சொற்பமாக இருந்தாலும் குடும்ப நடத்த போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் சினிமா வந்த பிறகு சினிமா நடிகர்கள் கோடிகளில் புரண்டார்கள். கிராமியக் கலைக் குடும்பங்கள் நாசமாயின. சினிமா என்பது போலி பிம்பங்களை உருவாக்க தடம் அமைத்தது. சினிமாவிற்கும் அரசியலுக்கும் ஆன தொடர்பு நீங்கள் அறிந்ததே.

இங்கு கிரிக்கெட் என்பது தேசிய அரசியல். சினிமா என்பது மாநில அரசியல்.
இப்படி கிரிக்கெட் மூலம் தேசப்பற்றை வளர்த்து, புரியாத மதத்தால் நாட்டை ஒருங்கிணைத்து, தெரியாத மொழியின் வளத்தால் மாநிலத்தை ஒருங்கிணைத்து, சினிமா மூலம் போலி பிம்பங்களை உருவாக்கி அவர்களை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்பதே இங்குள்ள அரசியல் கட்டமைப்பு. மக்கள் எல்லாம் வெறும் ஆதார் நம்பர்களே!!!!


(தொடரும்)

No comments:

Post a Comment